தமிழகத்தில் கல்வித்தரம் குறைய, கல்வி அதிகாரிகளே காரணம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சாடியுள்ளது.
நெல்லை மாவட்டம் பங்களா சுரண்டையில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியை வசந்தி ஹாசி ராணி. இவருக்கு முன்பு இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் பணியில் சேராமலேயே ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதும் காலியான தலைமை ஆசிரியர் பணியிடத்துக்கு வசந்தி நியமனம் செய்யப்பட்டார். வசந்திக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியதை அங்கீகரிக்க கோரி தென்காசி மாவட்ட கல்வி அலுவலருக்கு பள்ளி நிர்வாகம் மனு அனுப்பியது.
ஏற்கெனவே தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியில் சேராமல் ஒய்வு பெற்ற ஆசிரியரின் பணி விடுப்பு கடிதத்தை அளித்தால் மட்டுமே வசந்தியின் நியமனத்தை அங்கீகரிக்க முடியும் என கல்வி அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து தனக்கு தலைமை ஆசிரியராக 2.6.2018-ல் பதவி உயர்வு வழங்கியதை அங்கீகரிக்க மறுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் 19.9.2018-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனது பதவி உயர்வை அங்கீகரித்து பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என வசந்தி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், “பணியில் சேராமல் ஓய்வு பெற்றவருக்கு பணி விடுவிப்பு கடிதம் கேட்கக்கூடாது என ஏற்கெனவே ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தென்காசி கல்வி அலுவலரும் ஒரு எதிர்மனுதாரராக உள்ளார். அதன் பிறகும் அந்த வழக்கின் நகல் கேட்டு மனுதாரரை அலைகழித்துள்ளார். இந்தியாவில் கல்வியில் தமிழகம் 2-ம் இடத்தில் இருந்தது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு அடுத்து 18-வது இடத்தில் உள்ளது. தென்காசி கல்வி அலுவலரைப் போன்ற அதிகாரிகள் தான் கல்வித்தரம் குறைய காரணமாக உள்ளனர்.
இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்தாமல் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியாது. இதனால் தென்காசி மாவட்ட கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை அவர் பத்து நாளில் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இதைக் கல்வி அலுவலரின் பணப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மனுதாரருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியதை 2 வாரத்தில் அங்கீகரித்து பணப்பலன்களை வழங்க வேண்டும். இது போன்ற அதிகாரிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்” என உத்தரவிட்டார்.