பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வு ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ளதால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு மாற்று நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சிறு பட்டாசு ஆலைகளில்ஆய்வு செய்யக்கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் பட்டாசு உற்பத்தி, விற்பனையை நம்பியுள்ள நிலையில், விருதுநகர் சிவகாசி மதுரை ஆகிய இடங்களில் எத்தனை பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன? அவற்றில் எவ்வளவு பேர் பணியாற்றுகின்றனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசுத் தரப்பில் மாவட்ட வாரியான விவரம் தர உத்தரவிட்டனர். பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு மாற்று நடவடிக்கையை எடுப்பது அவசியம் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். பட்டாசு தொழில் நடைபெறும் மாவட்டங்களில் வேறு ஏதேனும் தொழில்களில் முன்னெடுக்க திட்டம் உள்ளதா? மதுரை விருதுநகர் மாவட்டங்களில் என்ன தொழிற்சாலைகளை அமைக்கலாம்? என்பது தொடர்பாக மத்திய, மாநில தொழில் துறை அமைச்சகங்களின் செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.