பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் மோகன் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக அவர் மீது பழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான் ஒரு முருக பக்தர். பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து எந்த விதமான அவதூறுகளையும் நான் பரப்பவில்லை. செவிவழிச் செய்தியாக நான் கேள்விப்பட்டதையே பேசினேன். ஆகவே, பழனி காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், "மனுதாரர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநராக உள்ள நிலையில் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டுமென்றே பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை உண்மை தன்மையை உறுதி செய்யாமல் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார் .
ஏற்கனவே இவர் மீது சமயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கைது செய்த நிலையில், பிணையிலேயே வெளியே வந்தார். ஆனால் தொடர்ந்து இது போன்று அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஆகவே, இவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக்கூடாது.
உண்மையிலேயே பழனி கோவில் மீது அக்கறை இருந்தால் பழனி கோவிலுக்கு சென்று அங்கு தூய்மை பணி மேற்கொள்ளலாம் அல்லது பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் சென்று கூட 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம்" என கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து, மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.