தூத்துக்குடி கடல் பகுதியில் அமெரிக்க கப்பல் அத்துமீறி நுழைந்த வழக்கில் 35 பேரை விடுவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ல் சீமேன் கார்டு ஓகியோ என்ற அமெரிக்க கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி
சிறைபிடிக்கப்பட்டது. அப்போது கப்பலில் இருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான
வழக்கில் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து 35 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர். அந்த வழக்கில் விசாரணை
முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 35 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். மேலும், அவர்கள்
வெளிநாடுகள் செல்வதை தடுக்கும் வகையில் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து மனு தாக்கல்
செய்யலாம் என்றும், மேலும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அதை திருப்பியளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.