மதுரை சித்திரை திருவிழாவின்போது 12 பெண்களிடமிருந்து 92 சவரன் தங்க நகைகள் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த 8 தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 19ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுடன் நிறைவுபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் 750 துணை ராணுவப் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகர்ப் பகுதி முழுவதும் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதனோடு 500 போலீசார் சீருடை அணியாமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர் திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, தீர்த்தவாரி, சாமி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் போது 12 பெண்களிடமிருந்து 92 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். இந்த சம்பவம் பொது மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மதுரை மாநகர் காவல்துறை, அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு நடத்தி நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.