மதுரையில் அபாயபான ப்ளூவேல் விளையாட்டை ஆடி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் போராடி மீட்கப்பட்டார்.
மதுரை மேலபாண்டியன் அகிழ் தெருவைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் கண்ணன் என்பவரின் மகன் விக்னேஷ் (26). பொறியியல் படிப்பு முடித்துள்ள இவர், ப்ளூவேல் கேமிற்கு அடிமையாகியதாக கூறப்படுகிறது. அந்த கேமில் தீவிரமடைந்த விக்னேஷ், பெற்றோர் கோவிலுக்கு சென்ற நேரம் பார்த்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டின் கதவை பூட்டிகொண்டு கையை அறுத்து கொண்ட அவர், தான் தற்கொலை செய்யப்போவதாக நண்பர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, முகநூலிலும் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து விக்னேஷின் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டிற்கு விரைந்தனர். அப்போது கதவை பூட்டிவிட்டு கையை அறுத்துக்கொண்ட நிலையில் விக்னேஷ் கிடந்துள்ளார். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்த தீயணைப்புத்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்டுள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், விக்னேஷ் உண்மையிலேயே ப்ளூவேல் கேமால் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பெற்றோர்கள் திட்டியது, காதல் தோல்வி போன்ற வேறேதும் காரணத்தால் தற்கொலை செய்ய முயன்றாரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.