சென்னை வேங்கைவாசலைச் சேர்ந்த வழக்கறிஞர் எலிபன்ட் ராஜேந்திரன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர்கள் நியமனம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தாக்கல் செய்திருந்தார். ராமநாத சுவாமி கோயிலில், 12 குருக்களும் 19 உதவி குருக்களும் பணியில் இருக்க வேண்டும் என்றும், தற்போது 2 குருக்கள், 7 உதவி குருக்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறியிருந்தார்.
மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 100 கோடி ரூபாய் வருமானத்தில் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை கவனம் செலுத்துகிறது என்றார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். வேலையை மட்டுமே செய்கிறது” எனக் கூறினர்.
தொடர்ந்து,
‘ராமநாதபுரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர்?
தற்போது எத்தனை பேர் பணியாற்றி வருகின்றனர்?
கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு?
பணியாளர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்பு போக மீதமுள்ள தொகை எவ்வளவு?
அத்தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது?
கோவிலில் உள்ள சந்நிதிகள் எத்தனை?’
என்பது தொடர்பாக இந்து சமய அறநிலைய துறையின் ஆணையர், அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலின் செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.