தனிப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத புகாரில் மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் வட்டாட்சியர் ஆகியோருக்கு 6 வாரங்கள் உரிமையியல் சிறையில் அடைக்க மேலூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதி சுரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரின் அரசு வாகனங்களை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கோரி அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த உசேன் முகமது மற்றும் ஜவஹர் அலி ஆகியோருக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்திற்கு தனிப்பட்டா வழங்கக் கோரி மேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதில், தனிப்பட்டா வழங்க வட்டாட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததால் 2014ஆம் ஆண்டு மேலூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உசேன் முகமது மற்றும் ஜவஹர் அலி ஆகியோர் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் வட்டாட்சியர் ஆகியோரை 6 வாரங்கள் உரிமையியல் சிறையில் அடைக்க மேலூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.