கல்லூரி மாணவியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட மதுரை அரசு கல்லூரி வரலாற்று பேராசிரியர் கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ் என்பவர் மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு கீழ் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும், புத்தன் சந்தை பகுதியை சேர்ந்த மாணவி கிளாடிஸ் புளோரா என்பவரிடம் ஆய்வு கட்டுரை சமர்ப்பண சான்றுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ரசல்ராஜ் கேட்ட பணத்தை மார்த்தாண்டம் பகுதியில் வைத்து இன்று தருவதாக கிளாடிஸ் புளோரா கூறியுள்ளார். அத்துடன் முதலில் ரூ.25 ஆயிரம் தருவதாகவும், பின்னர் மீதி பணத்தை தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பின்னர் தனது கணவர் பிஜு மோன் உதவியுடன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மார்த்தாண்டம் பகுதியில் பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பேராசிரியர் ரசல்ராஜ் மாணவியிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை வாங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர். அதனை தொடர்ந்து அருகில் இருந்த மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ரசல்ராஜ் வாங்கிய ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.