நாளை ஆடிப்பெருக்கு என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்குவதற்காக, இன்று காலை மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
பூ வியாபாரிகள், பூ வாங்க வந்தவர்கள் என அனைவருமே அளவுக்கதிகமாக கூடியதால் கொரோனா தடுப்பு பணியான சமூக இடைவெளி, அப்பகுதியில் கேள்விக்குறியானது. இதனால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டதால், மாட்டுத்தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூடுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் மலர் சந்தையை மூட வேண்டுமென ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு விற்பனைகாக வரும் பூக்கள், மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களிலிருந்தும் கொண்டு வரப்படும். கொண்டுவரப்படும் பூக்களை வாங்குவதற்காக, வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் அதிகளவில் வருகை புரிவார்கள். இச்சூழலில் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் வெளியூர் வியாபாரிகளும், வாங்குபவர்களும் அங்கு குவிந்தனர்
ஏற்கெனவே கொரோனா காரணமாக பிரதான கோயில்களில் பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பூக்களின் தேவை குறைந்திருப்பதாக எண்ணி, விலையை கணிசமாக குறைத்திருந்தனர் வியாபாரிகள். கடந்த ஆண்டு வரை இதுபோன்ற நாட்களில் மல்லிகை பூ விலை ரூ.1,000-க்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று காலை அவை ரூ.300-க்குத்தான் விற்கப்பட்டது.
விலை குறைந்த காரணத்தால், நேரமாக நேரமாக மக்கள் அதிகமாக வரத்தொடங்கினர். அதனால் ஏற்பட்ட விளைவுகளே, கூட்டம் கூடுதல் - தனி மனித இடைவெளியை பின்பற்றாமை - பலரும் முறையாக மாஸ்க் அணியாமை போன்றவையாவும். இவற்றைத் தடுக்கவே, ஆட்சியர் தற்போது இந்த மலர் சந்தை மூடும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.