செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ்
மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து 19-ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின்போதும் பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.
முன்னதாக நேற்று மாப்பிள்ளை அழைப்பிற்காக சுமார் 30 ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது. இன்று காலை உணவாக கிச்சடி, பொங்கல், கேசரி, வடை ஆகியவை பரிமாறப்பட்டன.
திருக்கல்யாண வைபவ விருந்தாக காலை 10 மணிக்கு மேல், சாம்பார் சாதம், வெஜ் பிரியாணி, தயிர் சாதம் ஆகியவை பரிமாறப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கிலோ அரிசி, 6 டன் காய்கறிகள், மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தி, 300க்கும் மேற்பட்ட பெண்கள், சமையல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.