செய்தியாளர்: மணிகண்டபிரபு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து - மாரியம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் அழகேந்திரன் (21) படித்து முடித்துவிட்டு ஓட்டுநர் வேலை தேடி வந்துள்ளார். இதனிடையே அழகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பெண்ணின் தாய்மாமன் பிரபாகரன் என்பவரை அழகேந்திரனை கள்ளிக்குடி வருமாறு போனில் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த அழகேந்திரனை இருசக்கர வாகனத்தில் வேழாம்பூர் கண்மாய்க்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அழகேந்திரன் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரித்த நிலையில், பிரபாகரன் காவல் நிலையத்தில் சரணடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அழகேந்திரன் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் தூண்டுதலின் பேரில் தான் ஆணவப் படுகொலை செய்ததாக கூறி அழகேந்திரனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி நேற்று முதல் அழகேந்திரனின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து இன்று 2ஆவது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அழகேந்திரனின் பெற்றோர் தமிழ்ப் புலிகள் கட்சியுடன் இணைந்து தொடர் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அழகேந்திரன் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.