முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்," ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். ஏழு ஆண்டுகள், 10 ஆண்டுகள், 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், அரசியல் தலையீடு காரணமாக நான் இன்னுமும் விடுதலை செய்யப்படவில்லை.
29 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில் மன உளைச்சல் ஏற்படுவதோடு, உடல் நலத்தையும் பாதிக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களின் முன்கூட்டிய விடுதலைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டமும் மனித நேய அடிப்படையில் வழிவகுக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
1600 ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான மனு பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களது விடுதலை தொடர்பான சட்ட மசோதா 22 மாதங்களுக்கும் மேலாக காத்திருப்பில் உள்ளது. ஆகவே 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் என்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.