‘கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக இதுதான் உதவும்’ - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

‘கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக இதுதான் உதவும்’ - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து
‘கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக இதுதான் உதவும்’ - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து
Published on

பல நேரங்களில் கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக சிறை நூலகங்கள் உதவும் என்று மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 135 மத்திய சிறைகள், 3 பெண்களுக்கான சிறப்புச் சிறைகள், 103 துணைச் சிறைகள், 10 பெண்களுக்கான துணைச் சிறைகள், இவைத் தவிர 7 சிறப்பு துணைச் சிறைகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 22,792 சிறைக் கைதிகள் உள்ளனர். ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்பது புகழ்பெற்ற பொன்மொழி.

சிறைகளில் நூலகம் வைக்கப்பட வேண்டும். அதேபோல தினசரி நாளிதழ்கள் மற்றும் இதழ்களை படிக்கும் பழக்கம் உள்ள சிறைவாசிகள் வாங்கிக் கொள்ளவும் அனுமதி உள்ளது. சிறைக் கைதிகளின் மனநிலையை மாற்றுவதில் இந்த நூலகங்கள் பெரும்பங்கு வகிக்கும். ஆனால் பெரும்பாலான சிறைகளில் அதற்கான முறையான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இல்லை. புத்தகங்கள் முறையாக அடுக்கி வைக்கப்படாமல் உள்ளன. தவறை உணர்ந்து மீண்டும் சமூகத்தில் ஒன்றி வாழ விரும்பும் சிறைக் கைதிகளுக்கு நூலகம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சிறைக் கைதிகளுக்கான விதிகளிலும் சிறைகளில் நூலக வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அது அனைத்து கைதிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என உள்ளது. ஆனால் பெரும்பாலான சிறைகளில் இவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே தமிழகத்தின் அனைத்துச் சிறைகளிலும் நூலகத்திற்கான உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், அவற்றினை முறையாக பராமரிக்கவும், டிஜிட்டல் நூலகங்களை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். அதோடு தகுதியான நூலகர்களை சிறை நூலகங்களில் பணி அமர்த்தி, நூலக வசதி அனைத்து கைதிகளுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு, "இந்த வழக்கு மிகவும் முக்கியமானது. பல நேரங்களில் கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக சிறை நூலகங்கள் உதவும். சிறைகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டு, தேவைப்படும் அனைத்து மொழிகளிலும் நூல்கள் வைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என குறிப்பிட்டு, வழக்கு தொடர்பாக தமிழக சிறைத் துறையின் கூடுதல் செயலர், தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com