மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் அழகு பைனான்ஸ் உரிமையாளர் சின்ன ராஜா. இவர் தன்னுடைய தந்தை சின்னையா நினைவாக வளர்த்து வரும் விநாயகம் என்ற காளையை இன்று அவனியாபுரம் வாடிவாசலில் அவிழ்த்தார்.
இந்நிலையில், காளையை பிடிப்பவர்களுக்கு விழா கமிட்டி சார்பாக தங்க காசு மற்றும் பரிசு பொருட்கள் அறிவித்துள்ள நிலையில், சின்னராஜா அவரது மாட்டை பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசை களத்திலே தருவதாக அறிவித்ததோடு பணத்துடன் வந்து வீரர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்நிலையில், வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட அவரது காளை விநாயகம், சீறிப்பாய்ந்து வந்து காளையரின் கைகளில் சிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் களத்தை விட்டு பாய்ந்து சென்றது அல்ல பறந்து சென்றது என்றே சொல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து காளை வெற்றி பெற்றதாக அறிவித்த விழா கமிட்டி காளையின் உரிமையாளருக்கு தங்கக்காசு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து காளையின் உரிமையாளர் கனடாவில் பணியாற்றி வருவதாக தெரிவித்த சின்னராஜா பேசுகையில்... ”இந்த காளையை சிறுவயதில் இருந்து நாங்கள் வளர்த்து வருகிறோம், எங்களுடைய காளை மீது எங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாகவே ஒரு லட்சம் ரூபாய் பரிசை எங்கள் காளை மீது அறிவித்தோம்.
இந்த காளை எங்கள் குடும்பத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது. காளை வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய தந்தை சின்னையா அவர்களின் நினைவாகவே இந்த காளையை இன்று களத்தில் இறக்கினோம்” என்று தெரிவித்தார்.