மதுரையில் அரசு போக்குவரத்து பணிமனையில் 15 லட்ச ரூபாய் திருட்டு தொடர்பாக ஊழியர்கள் மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, மதுரை மாநகர் பகுதிகளான ஆரப்பாளையம், பெரியார், மாட்டுத்தாவணி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுவதோடு, இயந்திர கோளாறுகளை பழுது நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிமனையில் மாநகர பேருந்தில் பயணிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட பயணச்சீட்டு கட்டணம் 15லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை நடத்துனர்களிடம் இருந்து வசூல் செய்து பெட்டிக்குள் வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று பெட்டியை திறந்து பார்த்தபோது பணம் மாயமாகி இருந்தது.
இதனையடுத்து பணம் திருடுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்த பணிமனை மேலாளர் ராஜசேகர் எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் புகாரின் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பணிமனை ஒப்பந்த ஊழியர்களான பாண்டியராஜன், செல்வம், சென்ராயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.