மதுரையில் 24 மணிநேரம் இயங்கும் தனியார் ஆக்ஸிஜன் உற்பத்திக்கூடத்தில் ஆக்சிஜன் பெற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகவும் தீவிரமாக பரவிவரும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தினமும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத் தெருவில் உள்ள தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட்டு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகித்து வருகின்றது.
வழக்கமாக 12 மணிநேரம் இயங்கி வந்த இந்த நிறுவனம் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 24 மணி நேரமும் இடைவிடாது செய்யப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ஆம்புலன்ஸ் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றன.