உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிராம விழாக் கமிட்டியினர் அலங்காநல்லூரில் பிப்.10-ம் தேதியும், பாலமேட்டில் பிப். 9-ம் தேதியும் அவனியாபுரத்தில் பிப்.5ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்துவதற்காக சிறப்புப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டி சட்டம் இயற்றியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர். மேலும், பிப்ரவரியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்திருக்கும் தகவலை முதலமைச்சரிடம் தெரிவித்து, அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டுக்காக உலகம் முழுவதும் போராடிய அனைவருக்கும் விழாக் கமிட்டியினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற தன்னெழுச்சி போராட்டம் காரணமாக, ஜல்லிக்கட்டிற்கான தடை நீங்கும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.