செய்தியாளர்: ரமேஷ்
108 திவ்விய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவில் யானைக்கு சுந்தரவல்லி தாயார் என்று பெயர் சூட்டப்பட்டது. யானையை கவனித்துக் கொள்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பாகன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுந்தரவல்லியை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர், ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சுந்தரவல்லிக்கு 18 வயது முடிந்து 19-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. அதற்காக நேற்று காலையில் குளியல் தொட்டியில் சுந்தரவல்லி ஆனந்த குளியல் போட்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தயாரானது.
பின்னர் யானை சுந்தரவல்லிக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜை செய்து அதற்கு ஏராளமான பழங்களை வழங்கினர். இதையடுத்து பக்தர்கள் கேக் வெட்டி யானையின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த்னர்.