மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை ரூ.2000 கோடியாக உயர்த்தியது, ஜப்பானின் ஜைக்கா நிதி நிறுவனம்தான் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்டத்தை மறுமதிப்பீடு செய்து, அதற்கான நிதி ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.2000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிதியை உயர்த்தியது ஏன் என, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியில், 15 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 85 சதவீத நிதியை ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிதி நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீட்டை ரூ.2,000 கோடியாக உயர்த்தியது, ஜைக்கா நிதி நிறுவனம்தான் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஜனவரி மாதம் பாரதப் பிரதமர் நேரில் அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை கட்டட பணிகள் துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.