செய்தியாளர்: ரகுமான்
சிங்காரவேலர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்...
”புதுச்சேரியில் பஞ்சு மிட்டாயில் ரசாயனம் கலந்திருப்பதாக அறிந்து தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்பு புற்று நோய் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதியானதால் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து வண்ணம் கலந்து விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அதே நேரம் வெண்மை நிற பஞ்சு மிட்டாய்களை விற்க தடையில்லை” என்றார்.
”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத் தாமதத்திற்கு நில ஆர்ஜிதம் செய்து தரப்படாததே காரணம் என்கிறார். இந்த மருத்துவமனை கட்டுவதற்கு மோடி அடிக்கல் நாட்டினார். அவரை அழைத்து வந்தது எடப்பாடி பழனிசாமி, நில ஆர்ஜிதம் செய்யப்படாத யாருக்கோ சொந்தமான இடத்தில் பிரதமர் எப்படி அடிக்கல் நாட்டினார்?. வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்டியதற்கு காரணமான எடப்பாடி பழனிசாமி தான் முதல் குற்றவாளி. எந்த தகவலும் தெரியாமல் அடிக்கல் நாட்டிய பிரதமரும் தவறு செய்தவரே, இந்த தகவலை தெரிந்தே பொய் சொல்கின்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்றார்.
புதுச்சேரி தொகுதியில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இதுகுறித்து கட்சித் தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.