அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதியதலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “அயோத்தி தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. ஜனநாயகத்தை காப்பாற்றி உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் காரணமாக இந்து மக்களும் இஸ்லாமிய மக்களும் மகிழ்ச்சியடையவோ, வருத்தப்படவோ சிறிதளவு கூட இடம் கிடையாது.
இரு மதத்திற்கும் சமமான தீர்ப்பு. அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தீர்ப்பு. இது வரவேற்கத்தக்கது. சமய நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் போற்றப்பட வேண்டிய தீர்ப்பு. இப்படிப்பட்ட தீர்ப்புதான் வரும் என கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே பேசியிருக்கிறோம்.
இந்த தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. நீதிபதிகளுக்கும் மத்திய அரசிற்கும் மனமார்ந்த நன்றி. நீதி நேர்மையானது, சத்தியமானது என்பதை உச்சநீதிமன்றம் நிரூபித்து காண்பித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும்போது பாபர் மசூதி சென்றுவிட்டு ஐயப்பன் கோயிலுக்கு செல்வது போல், ராமர் கோயிலுக்கு செல்வோர் பாபர் மசூதிக்கும், அதேபோல் பாபர் மசூதிக்கு செல்வோர் ராமர் கோயிலுக்கும் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.