அடுத்த மதுரை ஆதீனம் தாம்தான் என நித்யானந்தா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் அறைக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இதில் 292ஆவது மடாதிபதியாக இருக்கும் அருணகிரிநாதருக்கு, சுவாச கோளாறு பிரச்னை ஏற்பட்டதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டும் என நித்யானந்தா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது பீடாதிபதி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும் மற்றும் மதரீதியான சடங்குகள், பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகளையும் தாம் பெற்றுள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளார். மதுரை ஆதீனத்திற்கு நித்யானந்தா உரிமை கோரிய நிலையில், தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் மதுரை ஆதீன அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆதீனத்தின் அறையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள் இருப்பதால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. இளைய ஆதீனமாக நித்யானந்தாவை அறிவித்ததை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஏற்கனவே திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அனைத்து ஆதீனங்களின் வழக்கமான நடைமுறையாகவே, மதுரை ஆதீனத்தின் அறைக்கு சீல் வைக்கப்பட்டதாக தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை ஆதீனம் நோயிலிருந்து குணமடைந்து வர வேண்டும் என்பதே தங்களுடைய எண்ணம் எனத் தெரிவித்தார்.