மதுரையில் பழைய கார் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
மதுரை மாநகர் பழங்காநத்தம் அருகே நேருநகர் பகுதியில் பாண்டி என்பவருக்குச் சொந்தமான பழைய கார்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு பாண்டி வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதையடுத்து பாண்டியின் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கார் உதிரி பாகங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனை பார்த்த அருகிலுள்ள பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
முன்னதாக கடை முழுவதும் தீ பரவியதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழைய கார் உதிரிபாகங்கள், வாகன இன்ஜின்கள், டயர்கள், பெல்டுகள், சீட்டுகள் ஆகியவை முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் முக்கிய சாலையில் செயல்பட்டு வந்த கார் உதிரிபாக விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.