மதுரை திருமங்கலம் அருகே விமர்சியாக நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோயிலில், ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரெட்டியார் சேர்ந்தவர்களும் நடத்தி வரும் பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல 86-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்வர், இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊர்வலமாக கொண்டுவந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மாலையில் நடைபெற்ற விழாவில் கோயில் நிலைமாலையுடன், கிராம இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய்,பழம், பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோயிலில் வைத்து, சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமிதரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 120 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகளை முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார்செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.
கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த அன்னாதனத்தில் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும், இவ்விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கூறுகையில் முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் எனவும் வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி இது எனவும் கூறினர்.