மதுரை மேலவாசல் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை திடீர்நகர் அருகே உள்ள மேலவாசலில் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பூப்பல்லக்கு நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக தீ பந்த விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் சரவெடி பட்டாசு வெடித்துள்ளனர். இதில், எதிர்பாராதவிதமாக சர வெடி பட்டாசு மூலம் வெளியான தீப்பொறி திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட பந்தலின் மீது விழுந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அலறியடித்துக்கொண்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தீ பந்தல் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
திருவிழாவின் போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து குறித்து திடீர்நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.