மதுரையில் இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் தூரிகை ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறார்.
மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் சரவணாச்சாரி (45). இவர், தனது சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களை இழந்தவர். ஓவியத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், சிறு வயது முதல் ஓவியங்களை தொடர்ந்து வரைந்து வந்துள்ளார்.
பள்ளிகளில் நடக்கும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ள இவர், தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு உயரமான சுவர்களிலும் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களிலும் ஓவியங்களை கலைநயத்துடன் வரையத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த பல மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்து உதவியுள்ளார்.
ஓவியக் கலையை பலருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் 2009-ம் ஆண்டு ஓவியப் பள்ளியை தொடங்கி, ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவ மாணவியருக்கு சேவை மனப்பான்மையுடன் ஓவிய பயிற்சியை கலைநயத்துடன் கற்றுத் தருகிறார்.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நட்சத்திர விடுதிகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் ஓவியங்களை வரைந்து வரும் சரவணாச்சாரியை, அவரிடம் பயிலும் மாணவ மாணவியர்களும் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் வெகுவாக பாராட்டி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தி வருகின்றனர்.