ஆன் லைனில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக பெண் ஒருவர் கொடுத்த வாக்குறுதியை நம்பி 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை இழந்துவிட்டதாக மாற்றுத்திறனாளி இளைஞர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் (24) என்பவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “கடந்த 2.5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கி இரு கைகளையும் இழந்தேன். கடந்த 1 ஆண்டுக்கு முன்னர் எனது உறவினர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண் அறிமுகம் ஆனார். அவர், ஆன் லைனில் ட்ரேடிங் செய்வதாகவும், பணம் கொடுத்தால் பன்மடங்காக திருப்பி தருவதாகவும் என்னிடம் கூறினார்.
இதனால் 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அவரிடம் வழங்கினேன், துவக்கத்தில் 36 ஆயிரம் ரூபாயை பிரவீனா வழங்கினார். பின்னர் பணம் வழங்கவில்லை, பிரவீனாவிடம் பணத்தை திருப்பி கேட்டபோது என் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீதும், என் உறவினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் நானும், என் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், ஆகவே என்னுடைய பணத்தை திரும்பப் பெற்றுத் தருவதோடு பிரவீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.