`அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க இடைக்கால தடை'- சென்னை உயர்நீதிமன்றம்

`அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க இடைக்கால தடை'- சென்னை உயர்நீதிமன்றம்
`அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க இடைக்கால தடை'- சென்னை உயர்நீதிமன்றம்
Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி , இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இணை ஆணையரும், உதவி ஆணையரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டனர். இந்நிலையில் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன் தரப்பில் மட்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலைய துறை ஆணையர் தரப்பில், பிரதான வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில், தனக்கு எதிராக தனி நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது தவறு என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என தனக்கு எதிராக குற்றச்சாட்டு இல்லை என்பதால், அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மேல் முறையீட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com