அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு – மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி - சென்னை உயர்நீதிமன்றம்
அமைச்சர் ஐ.பெரியசாமி - சென்னை உயர்நீதிமன்றம்புதிய தலைமுறை
Published on

கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி மீது 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது. ‘அமைச்சருக்கும் இந்த வீடு ஒதுக்கீட்டுக்கும் தொடர்பில்லை; ஆகவே வழக்கில் முகாந்திரம் இல்லை’ எனக்கூறி அவரை விடுவித்தது நீதிமன்றம்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி

இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கில் பிப்ரவரி 13ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

அமைச்சர் ஐ.பெரியசாமி - சென்னை உயர்நீதிமன்றம்
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR சொத்துக்குவிப்பு வழக்கு: தாமாக முன்வந்து விசாரிக்கும் நீதிமன்றம்!

இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (பிப்ரவரி 26) தீர்ப்பளித்தார். அப்போது அமைச்சரை விடுவித்ததை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும்; அதிகாரத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடையே நம்பிக்கையை நாம் ஏற்படுத்தவேண்டும்.

இவ்வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி மார்ச் 28ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த வேண்டும். ஆஜராகாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கலாம்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன்வந்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடம் அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை தொடர்ந்து நடத்தியிருக்க வேண்டும். கீழ் நீதிமன்றமும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையை கேள்வி கேட்கவில்லை. அது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்முகநூல்

மேலும் தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்குள் முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வழக்கு ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com