'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி

'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி
'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி
Published on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது எனக்கூறி அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

நான் தான் மகள்:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்புக்குப்பின் தமிழகத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள், அதிமுகவுக்குள்ளே குழப்பங்கள், புதிய கட்சிகளின் வரவு, நடிகர்களின் திடீர் அரசியல் எண்ட்ரி என தமிழகமே பரபரவென ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத பரபரப்பை ஏற்படுத்தினார் அம்ருதா.

ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு நான் தான் என ஜெ.தீபாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் உரிமை கொண்டாடி வந்த நிலையில் ஜெயலலிதாவின் மகளே நான் தான் என வந்தார் அம்ருதா. இது தொடர்பாக குடியரசுத்தலைவர், பிரதமர், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதினார். மேலும் தானே ஜெயலலிதாவின் மகள் என்றும் இதை நிரூபிக்க வேண்டுமென்றால் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் தான் தயார் என்றும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். 

டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார்:

மனுவில் ''1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ல் ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்பு தாய் சைலஜா 2015லும், வளர்ப்பு தந்தை சாரதியும் இறந்துவிட்டனர். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தி உடலை எரியூட்ட வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இந்த மனுவை கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஏன்?” என கேள்வி  எழுப்பி சென்னை அல்லது கர்நாடக நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் அம்ருதா. உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வீடியோ ஆதாரத்தில் திருப்பம்:

வழக்கு விசாரணையின் போது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது 1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு, அதாவது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவை தாக்கல் செய்தது. அந்த வீடியோவில் ஜெயலலிதா கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசு வாதிட்டது. இதற்கு பதிலளித்த அம்ருதா வழக்கறிஞர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டுமென்றார். அதற்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏன் டின் ஏ பரிசோதனை செய்யக்கூடாது எனக்கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்பல்லோவில் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு தங்களிடம் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் இல்லை என அப்பல்லோ தனது மனுவில் தெரிவித்திருந்தது. 

ஜெயலலிதாவின் வாழ்க்கையே மர்மம்:

ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம் அம்ருதாவின் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக தலைமை செயலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

வழக்கு தள்ளுபடி:

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது எனக்கூறி, டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரிய அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com