கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இந்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் முதலில் ஒருவர் வெற்றி பெற்றதாகவும், பின் மற்றொருவர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டத்தில் உள்ள இந்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயக்கொடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் சில மணி நேரங்களில் விஜயா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயக்கொடி தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 675 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்து தேர்தல் அதிகாரி கையெழுத்துடன் அளிக்கப்பட்ட ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.அந்த ஆவணத்தை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி நவம்பர் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், தேர்தலில் வெற்றி பெற்றதாக எவரும் உரிமை கோரக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி இரண்டாவதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.