அதிமுக சின்னம்: ஓபிஎஸ் மேல்முறையீடு.. காரசார வாதம்

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
பிஎஸ் மேல்முறையீடு
பிஎஸ் மேல்முறையீடுபுதிய தலைமுறை
Published on

அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரிய ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

பிஎஸ் மேல்முறையீடு
அதிமுக பெயர், சின்னம் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்த விவகாரம்.. ஓபிஎஸ் அளித்த நச் பதில்

இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த மனுவில், ”கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றுதான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

OPS | OPanneerselvam
OPS | OPanneerselvam

இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,

ஒ.பன்னீர்செல்வம் தரப்பு:

ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ”தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு.

கொடி, சின்னம் பயன்படுத்த கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது. இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பிரதான வழக்கு நவம்பர் 30ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

ஒ.பன்னீர்செல்வம் தரப்பு
ஒ.பன்னீர்செல்வம் தரப்பு

ஒ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், “அதிமுக-வில் மூன்று கொடிகள் உள்ள நிலையில், எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார் என எடப்பாடி பழனிசாமி வழக்கில் விளக்கவில்லை. அண்ணா விரல் காட்டுவதுதான் உண்மையான கொடி என்பதால் அதை ஒபிஎஸ் பயன்படுத்தி வருகிறார். லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ்க்கு உள்ளது. அவர்கள் நீக்கப்படாத நிலையில், அவர்களுக்கும் எப்படி தடை விதிக்க முடியும்? மேலும் ஒபிஎஸ் ஆதரவாளர்களின் கைகளில் கட்சி சின்னமான இரட்டை இலையை பச்சை குத்தி உள்ளனர். எனவே தனி நீதிபதி உத்தரவால் அதை நீக்க முடியுமா?

பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்று கூறி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லுமா செல்லாதா என்பது குறித்து பிரதான சிவில் வழக்கில் தான் முடிவெடுக்க முடியும். பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எந்த காரணமும் குறிப்பிடாமல் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லத்தக்கதல்ல .

பிஎஸ் மேல்முறையீடு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை?

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக எந்த நேரடி உத்தரவும் இல்லாதபோது, அவர் தாக்கல் செய்த இவருக்கு எதிராக தடை கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல இல்லை. பதில்மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். அதுவரை தடை உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு:

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு முறை அவகாசம் கோரிய ஓபிஎஸ் தரப்பு மீண்டும் அவகாசம் கோரிகிறது. பதில்மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்த பிறகே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவரை கட்சியில் இருந்து நீக்கியதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. பொதுக்குழு தீர்மானத்தின்படி கட்சியில் இல்லை. பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத போது அதன் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த முடியும்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு
எடப்பாடி பழனிசாமி தரப்பு

இன்னும் ஒருங்கிணைப்பாளர் என கூறும் ஒபிஎஸ், கட்சியின் பொதுச் செயலாளரை நீக்குகிறார். லட்சக்கணக்கான ஆதரவாளர்களெல்லாம் அவருக்கு இல்லை. அப்படி இருப்பதாக கூறினாலும் முகம் தெரியாத அவர்களை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்பதால், அவர்கள் யாரையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவிக்கவில்லை.

இடைக்கால தடை உத்தரவை எதிர்த்த இந்த மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. நவம்பர் 30ஆம் தேதி வரை காத்திருக்காமல், தனி நீதிபதியிடமே தடையை நீக்க கோருவதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில், மறுநாளே தடையை நீக்கும்படி கோரியிருக்கலாம் .

இந்த இடைக்காலத் தடை உத்தரவு இறுதியானதல்ல, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தடை விதிக்கவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களை தனி நீதிபதி விளக்கிய பிறகுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

30 ஆண்டுகளாக கட்சியில் உள்ள ஓ.பி.எஸ். எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார்கள் என்பது தெரியவில்லை என கூறுவது வினோதமாக உள்ளது. இன்னும் எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ்-இபிஎஸ்
ஓபிஎஸ்-இபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர் என்று கூறியே அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்ததையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

பிஎஸ் மேல்முறையீடு
மருந்து தட்டுப்பாடு குற்றச்சாட்டு: இபிஎஸ் Vs மா. சுப்பிரமணியன்

அதிமுக கட்சியின் சொத்துகளான கட்சி கொடி, லெட்டர் பேடு ஆகியவை  யாருக்கும் சொந்தமானதல்ல என்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சியினரை நீக்க ஒபிஎஸ்-க்கு அதிகாரம் உள்ளதா?. கட்சி கொடியை பயன்படுத்த முடியுமா?” என கேட்டார்.

உடனே ஒபிஎஸ் தரப்பில் கட்சியின் கொடி கட்சிக்கு சொந்தமானதல்ல எனவும், தன்னால் கட்சியினர் நீக்கப்படுவது இந்த வழக்கிற்கு அப்பாற்பட்டது எனவும் விளக்கம் அளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தடையை நீக்கக் கோரும் ஒபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com