ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க கடந்த டிசம்பர் 15ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையவை அல்ல என்று கூறி, ஆலை இயங்குவதற்குத் தேவையான அனுமதியை மூன்று வார காலத்திற்குள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத், இரண்டு மாதத்தில் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தமது மனுவில், “பசுமை தீர்ப்பாய உத்தரவு வெளியாகும் முன்பே தீர்ப்பு நகல் வேதாந்தா நிறுவனத்துக்கு எப்படி கிடைத்தது?. டிசம்பர் 15ம் தேதி மதியம் 2 மணிக்கு தான் அதிகாரப்பூர்வ உத்தரவு நகல் வெளியானது. ஆனால், அதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு வேதாந்தாவுக்கு நகல் கிடைத்துவிட்டது. எனவே தீர்ப்பாயம் அறிவிக்கும் முன்பே வெளியாகும் உத்தரவு செல்லாது என்ற வழிகாட்டுதல் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடக் கூடாது தெரிவித்ததோடு, வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.