தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்தவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தகீன் என்பவரை, கடந்த ஜூலை 26-ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து அவர், அரபி மொழியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுடன் நடத்திய உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆசிப் முஸ்தகீன் தாக்கல் செய்த மனுவை, ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்தகீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடுமையான நிபந்தனைகள் விதித்தும் கூட ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கைது குறித்த தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல், பென் டிரைவ், டைரி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், மொபைலில் இடம் பெற்றிருந்த அரபி மொழியில் நடந்த உரையாடல்களின் கூகுள் மொழிபெயர்ப்பு தவறானது எனவும், தொடர்புடைய மற்றவர்களை சேர்க்காமல் மனுதாரர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகே பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவை குறித்து கைது தகவலில் குறிப்பிடவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும், வழக்கின் புலன் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.