“இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்” - கி.வீரமணி நம்பிக்கை

“இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்” - கி.வீரமணி நம்பிக்கை
“இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்” - கி.வீரமணி நம்பிக்கை
Published on

பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதால், இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் தலைமையில் சென்னை ‌உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை மாதம் குழு அமைத்தது. ஆனால், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சிலைக் கடத்தல் வழக்குகளை மட்டும் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

தற்போதைய வழக்குகளையும், எதிர்காலத்தில் பதிவாகும் புகார்களையும் சிபிஐக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெற்றதால், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் புதிதாக ஏடிஜிபி பதவியை உருவாக்கி, அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்தது. 

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி ஆதிகேசவலு ஆகியோர் வழங்கினர். அதில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். இன்றுடன் ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அவர் ஐஜியாக இருந்த போது வழங்கப்பட்டது போன்று காவலர்களை வழங்க வேண்டும் என தெரிவித்தனர். விசாரணை குறித்த தகவல்களை பொன். மாணிக்கவேல் சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொன்.மாணிக்கவேலுக்கான ஓராண்டு கால பதவி நீட்டிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, “இனி தெய்வங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com