ஊழியர்கள் அலட்சியம்...  திருமண வாழ்க்கையை பறிகொடுத்தவருக்கு ரூ.63 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஊழியர்கள் அலட்சியம்...  திருமண வாழ்க்கையை பறிகொடுத்தவருக்கு ரூ.63 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஊழியர்கள் அலட்சியம்...  திருமண வாழ்க்கையை பறிகொடுத்தவருக்கு ரூ.63 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
Published on

ஊழியர்களின் அலட்சியத்தால் திருமண வாழ்க்கையை பறிகொடுத்த வாலிபருக்கு ரூ. 63 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார்(36). ஏசி மெக்கானிக்காக இருக்கும் இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்கம்பம் அவர் மீது சாய்ந்து விழுந்து படுகாயம் அடைந்தார். முதுகு தண்டுவடம் அவருக்கு பாதிப்படைந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து அன்றாட பணிகளை செய்து வருகிறார்.

இதனால் தனது திருமண ஆசை பறிபோய் விட்டதாகவும் இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆனந்த குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று தீர்ப்பை வாசித்தனர். அதில், “பாதிக்கப்பட்டுள்ள ஆனந்தகுமாருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.63.26 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகைக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை 7.5 சதவீத வட்டி வழங்க வேண்டும். இந்த இழப்பீடு தொகையில் ரூ. 10 லட்சத்தை மட்டுமே ஆனந்தகுமார் உடனடியாக எடுத்துக்கொள்ளலாம். மீதி தொகையை நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்து, அதில் இருந்து வரும் வட்டியை அவருக்கு வழங்க வேண்டும். ஆன்நதகுமாருக்கு ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டே இந்த தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிடுகிறோம். 

மேலும் இந்த தொகை அவர் ஈட்டிய வருமானம் இல்லை என்பதால் இதற்கு வங்கி அதிகாரிகள் வருமான வரிக்கழிவு பிடித்தம் எதையும் செய்யக்கூடாது. இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் 2020 பிப்ரவரி 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. 

மேலும், இல்லற வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதோ, பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பம். யாரும் அதனை கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம் மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக அவரது இல்லற வாழ்க்கை நிராசையாகி விட்டது. இயற்கை உபாதையைக் கழிப்பதற்குக் கூட இன்னொருவரின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவர் இல்லற வாழ்க்கையையும் பறிகொடுத்துள்ளார் என நீதிமன்றம் குறிப்பிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com