அயோத்தி ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் மத்தியஸ்தராக செயல்பட்ட உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சுவுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் இடம் தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தக் குழுவில் உச்ச நீதிமன்றத்தால் 2019-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு. அப்போது அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை தமிழக அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதால் தனக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கை ரகசியமான முறையில் விசாரித்தால் அந்த சம்பவங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க தான் தயாராக இருப்பதாகவும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது .
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.