திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை நான்கு வாரங்களில் இறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
LGBTQIA+ சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி அனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், `ஊடகங்களில் LGBTQIA+ சமுதாயத்தினர் அளித்த சொற்களஞ்சியத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்குவது தொடர்பாக சொற் பிறப்பியல் மற்றும் அகராதி துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, முதல்வருக்கு அனுப்பி வைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதற்காக நான்கு வார கால அவகாசம் வழ்ங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
மேலும், `பள்ளிக் குழந்தைகளுக்கு இப்பிரிவினர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சி வழங்கப்பட்டு அதன் விவரங்கள் அடுத்த விசாரணையின் போது அறிக்கையாக தாக்கல் செய்யப்படும். மேலும், இப்பிரிவினருக்கான உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவித்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, LGBTQIA+ சமுதாயத்தினரை குறிப்பிடும் சொற்களஞ்சியத்தை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும், இப்பிரிவினருக்கான உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகள் இறுதி செய்ய நான்கு வார காலம் அவகாசம் வழங்கி, விசாரணையை ஆகஸ்ட் 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதுதொடர்பான அறிவிப்புடன் சேர்த்து, `பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தொழில்ரீதியிலான தவறான நடத்தை என அறிவிக்கை வெளியிடுவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசுத்தரப்பு வழங்கிய `ஊடகங்கள் பயன்படுத்துவதற்கான சொற்களஞ்சியத்தில்’ இரு பாலீர்ப்பு, ஒரு பாலீர்ப்பு, விரும்பப்படுபவன், விரும்பப்படுபவள் உள்ளிட்ட சொற்றொடர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வார்த்தைகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் LGBTQIA+ சமுதாயத்தினர் தங்களை திருநர், திருநங்கை, திருநம்பி, மகிழ்வன் உள்ளிட்ட பெயர்களை பயன்படுத்தலாம்’ எனக் கூறப்பட்டிருந்தது. சமுதாயத்தினர் பரிந்துரைத்த பெயர்களை தற்போதைக்கு பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.