கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகரில் தேங்கி கிடந்த மழை நீரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சென்னையில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற மின் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மின்வாரியத் துறையைச் சேர்ந்த 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.