ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதனையடுத்து, மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை நடைபெறும் என தெரிவித்த தமிழக அரசு, மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் எனவும் தெரிவித்திருந்தது. சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆறுமுகசாமி செப்டம்பர் 30-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து, நீதி விசாரணை ஆணையம் அமைத்ததை எதிர்த்து வழக்கு தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மனு தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.