செய்தியாளர்: V.M.சுப்பையா
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்-கை டெல்லி போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டதால், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் அணியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவரது பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிக்காராமன், ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.