தஞ்சை பெரிய கோயிலில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆன்மிக நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது எப்படி? என்று மத்திய தொல்லியல்துறை உதவி பாதுகாவலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பு சார்பில் தஞ்சை பெரிய கோயிலில் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு பந்தல் போடப்பட்டது. பாரம்பரியம் மிக்க தஞ்சை கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தது. நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வாலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பு சார்பில் நடைபெறவிருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை கோரி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெங்கட் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தஞ்சை பெரிய கோயிலில் நடத்தவிருந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரியகோயிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோயில் தேவஸ்தானம் மற்றும் தொல்லியல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதாக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தரப்பில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எந்த அடிப்படையில் கோயிலில் நிகழ்ச்சி நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மத்திய தொல்லியல்துறையின் உதவி பாதுகாவலர் வரும் 13 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.