-செய்தியாளர் முகேஷ்
பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு, முன்பொருமுறை விழுப்புரத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொன்முடி தரப்பை விடுதலை செய்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் “இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 19 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும்” என நேற்று தெரிவித்த நீதிபதி, “விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்த வழக்கு விசாரணையை, வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டதா என்பது குறித்து பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளிக்கவும்” என உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக வேலூர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த் லீலா, பிப்ரவரி 23ஆம் தேதி தனது வாதங்களை முன்வைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டதுடன், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தங்கள் தரப்பு ஆட்சேபனைகளை பதில் மனு அல்லது எழுத்துப்பூர்வமான வாதம் என்ற அடிப்படையில் ஜனவரி 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளார்.