செய்தியாளர் இ.சகாய பிரதீபா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, கீழப்பசலை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தினை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வைகை ஆற்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆதனூர் கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கப்படும். தற்போது வைகை ஆற்றில் மழைநீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆகவே, ஆதனூர் கண்மாய்க்கு நீர் நிரப்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “மதுரை வைகை ஆற்றின் கரையோரம், மாநாகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் குடியிருப்போர், வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பதுபோல் அடிப்படை கடமைகளும் உள்ளன. வைகை ஆற்றில், வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி சுத்தம் செய்கின்றனர். குப்பை கொட்டுகின்றனர். இதை நானே நேரில் பார்த்தேன். குடிநீருக்கு பயன்படும், வைகை ஆற்று நீரை மாசுபடாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?
வைகை ஆற்றில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநாகராட்சி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க இங்குள்ள ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” எனக்கூறி, மனுதாரரின் மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.