"இருதய பாதிப்பால் சிகிச்சை பெறுகிறேன்.." - சவுக்கு சங்கர் மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இருதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்றம் ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்க வேன்டும் - மனுதாரர் தரப்பில் வாதம்.
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்எக்ஸ் தளம்
Published on

யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? எத்தனை வழக்குகளில் ஜாமினில் உள்ளார்? எந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்? என்பது குறித்த தகவல்களை சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். அவர்மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனிடையே கஞ்சா வைத்து இருந்ததாகவும் அவர்மீது மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்த யூடியுபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்தார். அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை,சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கஞ்சா வைத்திருந்ததாக என் மீது தேனியில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

என் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து அதன் கீழ் தமிழக அரசு என்னை சிறையில் அடைத்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் என் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் பெண் காவலர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் ஜாமின் வழங்கி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கையெழுத்து இடவேண்டும் என்று கீழமை நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் தற்போது நான் சென்னையில் வசித்து வருவதால், அனைத்து வழக்குகளிலும் ஒரே காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து இடும் வகையில், நிபந்தனைகளில் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பல்வேறு காவல் நிலையங்களில், நிபந்தனை கையெழுத்து போட முடியாத சூழல் உள்ளது. எனவே ஒரே காவல் நிலையத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் சவுக்கு சங்கர் தற்போது இருதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றம் ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வாதிட்டார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்pt web

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் ஒரே காவல் நிலையத்தில் அனைத்து வழக்குகளில் நிபந்தனை கையெழுத்திட கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? எத்தனை வழக்குகளில் ஜாமீன் மற்றும் எந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்? என்பது குறித்து தகவல்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com