கல்லூரி வளாகத்தில் 10 மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க சட்டக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரி "ஓப்பனிங் டே" அன்று பேருந்தில் மீது ஏறி கூச்சல் எழுப்பி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
அதில் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் துரைராஜ் மீது வழக்குப் பதியப்பட்டது. அந்த வழக்கு எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக் கல்லூரி மாணவரான தன்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் என நினைத்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் என கூறிய மாணவர் துரைராஜ் தன்னுடைய கல்லூரி அடையாள அட்டையையும் காண்பித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், “துரைராஜ் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார் என்றாலும், அவரது எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது. கல்லூரியில் 10 மரக்கன்றுகளை நட்டு, ஒரு மாதத்திற்கு தண்ணீர் ஊற்றி அவற்றை பராமரிக்க வேண்டும். தான் பராமரிக்கும் மரக் கன்றுகளின் விவரங்களை கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும் துரைராஜ் மீதான வழக்கை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.