செய்தியாளர்: V.M.சுப்பையா
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுகவினர் பல இடங்களில் ஆட்டுக்கு அவரது போட்டோவை அணிவித்து நடுரோட்டில் வெட்டி அதன் ரத்தத்தை ரோட்டில் தெளித்து கொண்டாடினர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ்என்பவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழக அரசு மற்றும் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறப்பட்டிருந்தது.
விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, “இதுபோன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம். மட்டுமல்லாது இது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி குற்றமாகும். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். அரசியல் கட்சி தலைவர்கள் போட்டோவை அணிவித்து மக்கள் மத்தியில் ரோட்டில் விலங்குகளை துன்புறுத்தி வெட்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனவும் வாதிட்டார்.
இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இதுபோன்ற விஷயங்களை ஏற்க முடியாது” என தமிழக அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தது. மேலும், “இவ்விவகாரத்தில் தமிழக அரசு ஒருவார கால அவகாசத்திற்குள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒருவார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.