சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கிணற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததாக வெளியான செய்தியின் உண்மைத் தன்மையை அறிவதற்கு இணை இயக்குனர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அப்போது பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் மருத்துவக் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. இதனால் அதை பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலை இருந்தது. இது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தற்போது கிணற்றை சுத்தம் செய்துள்ளது. மருத்துவர் செந்தில்குமார், இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், ’’மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான மருந்துவக் கழிவுகள் கிணற்றில் கொட்டப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.
காலாவதியான மருந்துகள் அல்லது பேப்பர்கள் அகற்றப்பட வேண்டியதுதான். ஆனால் கிணற்றில் கொட்டியது தவறு. இதுகுறித்து நேரில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருந்தாளுநர்களிடம் கேட்டபோது அவர்கள் காலாவதியான மருந்து எங்களிடம் இல்லை என்று தெரிவித்தனர். இருப்பினும், செய்தியின் உண்மைத்தன்மையை அறிய இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே காலாவதியான மருந்து கொட்டப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் ஒருசில இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவக் கழிவுகளை அகற்றும் முறைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொற்று ஏற்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துவது தான் தீர்வு. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைபப்டுத்த வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை. மேலும், ’முகக்கவசம் உயிர் கவசம்’ என்று விழிப்புணர்வை நாளை சென்னை மயிலாப்பூர் பகுதியில் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக 50 ஆயிரம் மக்களுக்கு 145 பேர் 4 மணி நேரம் முகக்கவசம் கொடுக்கவுள்ளோம்’’ என்றார்.
தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்த கேள்விக்கு, பொது நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு தடை எதுவும் தெரிவிக்கவில்லை. அரசு தெரிவித்து இருப்பதுபோல முக கவசம், சமுக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்