தமிழ்நாடு
கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லாததே போதைபொருள் பழக்கம் அதிகரிக்க காரணம் - மா. சுப்பிரமணியன்
கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லாததே போதைபொருள் பழக்கம் அதிகரிக்க காரணம் - மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே போதைப்பொருள் பழக்கம் அதிகரிக்க காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் நடைபெற்றுவரும் "போதைப் பொருட்கள் தடுப்பு மாநாடு" குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்றது. போதைப்பொருள் தடுப்பு, போதை பொருள் பயன்படுத்துவோரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருளை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து ''திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மலைப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கஞ்சா பொருட்கள் ஊடுருவியுள்ளது. இதனை தடுப்பதற்கான ஆலோசனையை முதலமைச்சர் மேற்கொண்டார்.
இளைய சமுதாயத்தினர் பல வகைகளில் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர். நுண்ணறிவு பிரிவை ஏற்படுத்தி போதைப் பொருட்கள் ஊடுருவும் முயற்சிகளை கண்டுபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். வாட்சப் குழுக்களில் புனைப்பெயர் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதை நுண்ணறிவு மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்பவர் குறித்து தகவல் தெரிவிக்க விரைவில் இலவச தொடர்பு எண் அறிவிக்கப்படும். போதைபொருள் விற்பனை செய்த 102 பேரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 65 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் 15 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை செய்பவர் மீது 7 மடங்கு அதிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் இல்லாத மாநிலங்களில் கள்ளச்சாரய இறப்பு அதிகரித்துள்ளது . எனவே போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியா முழுமைக்கும் போதைப் பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் பரவலை கட்டுப்படுத்த தவறியதே போதைப்பொருள் அதிகரிக்க காரணம்’’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.